நெல்லையில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் ஏற்படுத்திய ஆறுமுகம் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா. இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தச் சூழலில் நேற்று இரவு கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த ஆறுமுகம் என்ற நபர், கடந்த மாதம் தனக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தது குறித்து உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நேரத்தில் ஆறுமுகம் தன் கையில் வைத்திருந்த கத்தியால் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை கழுத்தில் அறுத்துள்ளார். சம்பவத்தின்போது அருகில் இருந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆய்வாளரை மீட்டு உடனடியாக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கத்திக்குத்து காயம் ஏற்படுத்திய ஆறுமுகத்தை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM