லக்னோ: தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தங்கள் பள்ளி மாணவிகளை மொட்டைமாடியில் பூட்டிவைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமையன்று நடந்துள்ளது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உள்ளூர் போலீஸார் அறையில் பூட்டிவைக்கப்பட்ட மாணவிகளை மீட்டு மீண்டும் பள்ளி விடுதிக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
லக்கிம்பூர் கேரியின் கல்வி அதிகாரி லக்ஷ்மிகாந்த் பாண்டே இச்சம்பவம் குறித்து அளித்தப் பேட்டியில், தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை எதிர்த்து இரண்டு ஆசிரியர்கள் இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே அவர்கள் இருவர் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கையாகவே இருவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இருவருக்கும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் பணி புரிய உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் அந்த உத்தரவை ரத்து செய்ய அழுத்தம் தர இருவரும் இந்த மோசமான செயலில் ஈடுபட்டனர் என்றார்.
மனோரமா மிஸ்ரா, கோல்டி கட்டியார் ஆகிய அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கலாகும் எனத் தெரிகிறது.