பலகோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு சக திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும் என ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் குழிப்பணியாரம், கேழ்வரகு கூழ், கொழுக்கட்டை போன்ற சுமார் 250 வகையான உணவுகள் தயார்படுத்தி எடுத்து வந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்குவார் தங்கம், “இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் திறனை வளர்த்துக் கொள்வார்கள். மேலும், அவர்களின் பொறுப்புணர்ச்சி மற்றும் தங்களின் வேலையில் ஓர் அர்ப்பணிப்பு, இணக்கமான நடத்தை, சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களுடன் பழகும் திறன், சிந்திக்கும் திறன், ஆளுமைத் திறன் போன்ற முழுமையான வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. மாணவர்கள் தன்னிச்சையாக செயல்படும் திறனை இந்த பள்ளி ஊக்குவிக்கின்றது.
தற்போது பல பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்க இன்மையாக நடந்து கொள்கிறார்கள். ஆசிரியர்களை அடிக்கும் அளவுக்கு கஞ்சா போன்ற தீய பழக்கங்களை கற்றுள்ளனர். அதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருக்க, இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை ஒழுக்கமான பாதைக்கு கொண்டு செல்லும்” என்று கூறினார்.
மேலும், “பல கோடி சம்பளம் வாங்கும் திரைப்பட நடிகர்கள் அவர்களது வருமானத்தில் குறைந்த அளவாவது சக தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் செலவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM