உத்தர பிரதேசத்திலுள்ள காஜியாபாத் மாவட்டத்தை மோடிநகர் பகுதியில் 11 வயது சிறுவனொருவன் பள்ளி பேருந்தில் பயணிக்கையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சியும் வெளியாகி பார்ப்போரை கலங்க வைக்கின்றது. அந்த வீடியோவை பார்த்தபின்னர், குழந்தையின் இறப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணமென்று கூறி அவர்களுக்கு எதிராக குழந்தையின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 21-ம் தேதி உ.பி.யை சேர்ந்த 11 வயது சிறுவனான அனுராக் என்பவர், பள்ளி பேருந்தில் செல்கையில் வேடிக்கை பார்த்தபடி பயணித்திருக்கிறார். வேடிக்கை பார்க்க தலையை வெளியே நீட்டி சென்ற அவர், வழியிலிருந்த மின்கம்பத்தில் அடிபட்டு உயிரிழந்திருக்கிறார். அச்சிறுவன் தனக்கு வாந்தி வருவது போல இருந்ததால் காற்று வாங்கவே தலையை வெளியே நீட்டியதாகவும் சொல்லப்படுகிறது. சிசிடிவி காட்சியின்படி அப்படி தலையை நீட்டிய சிறுவன், வளைவொன்றில் பேருந்து திரும்பிய போது அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியதாக தெரிகிறது.
சிறுவன் உயிரிழப்பை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் பேருந்து பராமரிப்புக்காக கவனம் செலுத்தாமல் இருந்ததே சிறுவனின் இறப்புக்கு காரணம் எனக்கூறி சிறுவனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார். அதனடிப்பையில் பேருந்து ஓட்டுநர், பராமரிப்பாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பள்ளி முதல்வர் கைதுக்குப்பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும் முதல்வர் விசாரணை வளையத்துக்குள்தான் இருப்பாரெனக்கூறி `அவர் மீத தவறேதும் இருந்தால் அவரும் கைது செய்யப்படுவார்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விடுதலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி சிறுவனின் குடும்பத்தினர் கஜிதாபாத் – மீரத் ஹைவேயில் காவல்நிலையத்தின்முன்பு `லஞ்சம் பெற்றுக்கொண்டு பள்ளி முதல்வரை காவல்துறையினர் வெளியே விட்டுவிட்டனர்’ எனக்கூறி போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். மீண்டும் முதல்வரை கைது செய்யும் வரை தாங்கள் போராடுவோமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட அந்தப் பேருந்து இயங்குவதற்கான காலக்கெடு மார்ச் 2021-லேயே முடிந்துவிட்டதாகவும்; பேருந்தின் மாசுகட்டுப்பாடு சான்றிதழும் கடந்த மார்ச் 2022-ல் முடிந்துவிட்டதாகவும் ஆர்.டி.ஓ. தகவல் தெரிவித்துள்ளது. ஆகவே பேருந்தை சரியாக கவனிக்காததே பிரச்னைக்கு காரணமென சொல்லப்படுகிறது.
இப்படி தொடர் பிரச்னைகள் எழுந்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பெண் அரசு அதிகாரி கராறாக பேசும் வீடியோவொன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின்படி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டான அந்த அதிகாரி, போராட்டத்திலிருந்து ஒரு பெண்ணிடம் “போதும், நிறுத்தங்கள். ரொம்ப நேரமாக நான் உங்களுக்கு இந்த விஷயத்தை விளக்கி வருகிறேன்” என்று சத்தமாக அதட்டியபடி கூறியுள்ளார். இதற்கு அந்தப்பெண் “அக்குழந்தை, உங்கள் மகனா? நான் போதுமான அளவு உங்கள் கருத்தை புரிந்துக்கொண்டேன்” என்கிறார்.
இதில் அரசு அதிகாரி பேச்சுவார்த்தை நடத்திய பெண் அக்குழந்தையின் தாய் என்று தகவல் பரவிவந்தது. குழந்தையை இழந்த தாயிடம் ஒரு அரசு அதிகாரி இப்படி பேசுவது தவறென்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அவர் குழந்தையின் தாயில்லை என காசிதாபாத் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் விளக்கம் கூறியுள்ளார். உ.பி.யின் எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், `பாஜக ஆட்சியில் 2.0’ என்றுகூறி அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.
भाजपा 2.0 के राज में … pic.twitter.com/4UvRlnPRsg
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 22, 2022
தொடர்ந்து பதற்றம் நிலவிவருவதை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் `தவறிழைத்தவர்களி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது மாநிலத்தின் அனைத்து பள்ளி வாகனங்களையும் அதன் தரச்சான்றிதழ்களையும் சோதிக்க அறிவுறுத்தியுள்ளோம்’ என்றும் உறுதியளித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.
சமீபத்திய செய்தி: டாஸ் ட்ரெண்டிங்கை மாற்றிய பாண்ட்யா – கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஸல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM