டெல்லி : பாகிஸ்தானுக்கு சென்று உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களின் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்று பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவை கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் இந்திய குடிமக்கள் யாரும் பாகிஸ்தானில் எந்த ஒரு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கல்வி சான்றிதழுக்கு வேலைவாய்ப்புக்கான தகுதி கிடையாது என்றும் தொடர்ந்து இந்தியாவில் உயர்கல்வியை தொடர முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது பிள்ளைகள் பாகிஸ்தானில் பட்டம் பெற்ற பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்றிருந்தால், உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதி சான்றிதழைக் கட்டாயம் பெறவேண்டும் என்றும் சான்றிதழ் பெற்ற பிறகு, இந்தியாவில் வேலை தேடத் தகுதியுடையவர்கள் ஆவர் என்றும் UGC மற்றும் AICTE தெரிவித்துள்ளது. சீனாவில் படிப்பதற்கு எதிராக இந்திய மாணவர்களை யூஜிசி கடந்த மாதம் எச்சரித்த நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் படிக்கக் கூடாது என யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.