புதுச்சேரி: தடையை மீறி பேனர் வைத்ததாக புகார் – சமூக ஆர்வலர் மீது தாக்குதல்

புதுச்சேரியில் பேனர் தடை சட்டத்தை மீறி, அமித்ஷாவை வரவேற்று பேனர் வைத்தவர்கள் குறித்து புகார் அளிக்கச் சென்ற சமூக ஆர்வலர் மீது போலீசார் முன்னிலையில் பாஜகவினர் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான தடை சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் நாளை புதுச்சேரிக்கு வருகை தர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று, பாஜகவினர் ஒதியன்சாலை காவல் நிலையம் எதிரே பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் மோதி, முதியவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
image
அப்போது சம்பவ இடத்திலிருந்த புதுச்சேரி போராளிகள் குழுவின் தலைவர் சுந்தர் என்பவர் இதுகுறித்து ஒதியன்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித் துறையினரிடம் முறையிடுமாறு போலீசார் சுந்தரிடம் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை அதிகாரி ஏழுமலை என்பவரிடம் சுந்தர் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜகவினர், அரசு அலுவலகத்தில் வைத்து போலீசார் முன்னிலையில் சுந்தரை கடுமையாக தாக்கியும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
image
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த சுந்தரின் ஆதரவாளர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பொது இடத்தில் பேனர் வைத்தது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சமூக ஆர்வலர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.