மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு எங்கே போனது; மத்திய அரசு கொடுத்த பணம்?| Dinamalar

சென்னை : மத்திய அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும், யூ.டி.ஐ.டி., எனப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’களை, தபாலில் அனுப்ப நிதி ஒதுக்கப்பட்டும், தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வினியோகம் செய்வது, மாற்றுத் திறனாளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், யூ.டி.ஐ.டி., என்ற ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, ஸ்மார்ட் கார்டுகளை தபாலில் அனுப்ப, ஒரு கோடியே 92 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இணையதளம்இந்த தொகையில், தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உயர் அதிகாரிகள் துணையோடு முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யூ.டி.ஐ.டி., எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள், டில்லியில் அச்சிடப்பட்டு, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக தமிழகம் முழுதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவை மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை இணையதளத்தில், தமிழக அதிகாரிகளால் பதிவேற்றம் செய்யப்பட்டன.டில்லியில் இருந்து கார்டுகள் தபாலில் வரும் என, மாற்றுத் திறனாளி நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போது தமிழகம் முழுதும் உள்ள மாற்றுத் திறனாளி சிறப்பு பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், தபாலில் அனுப்பப்படுகின்றன.

இது குறித்து, மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, தபாலில் கார்டுகளை அனுப்ப, 1.92 கோடி ரூபாய், மத்திய அரசால் வழங்கப்பட்டது தெரிய வந்தது. மத்திய அரசு தபாலில் அனுப்ப நிதி ஒதுக்கிய நிலையில், தொண்டு நிறுவனங்கள் அப்பணியை செய்வது ஏன்?

மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே சென்றது என்ற, கேள்விகள் எழுந்துள்ளன.இதுகுறித்து, மாற்றுத் திறனாளி நல அலுவலக ஊழியர்கள் கூறியதாவது:தனியார் நிறுவனம் ஒன்று, ஆயிரக்கணக்கான அடையாள அட்டைகளை, மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தது. அதை அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள் மற்றும் அரசு உதவித் தொகை பெறும் தொண்டு நிறுவனங்கள் வழியாக வினியோகிக்க, மாற்றுத் திறனாளி நல ஆணையர், அடையாள அட்டை பிரிவுக்கு பொறுப்பு அலுவலரான துணை இயக்குனர், உதவி தனி அலுவலர் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.அடிக்கடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி, தனியார் நிறுவனத்தில் இருந்து பெறப்படும் ஸ்மார்ட் கார்டுகளை வினியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.

ஆணையர் அலுவலக அதிகாரிகளால், மாவட்ட அலுவலகங்களுக்கு, தபால் செலவு அனுப்பப்படாததால், சிறப்புப் பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழியாக வினியோகம் செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மாற்றுத் திறனாளிக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனப் பதிவு, அங்கீகாரம், மானியத் தொகை, அரசு நிதி ஆகியவற்றை பரிந்துரைக்கும் அதிகாரம், மாவட்ட நல அலுவலர்களிடம் உள்ளதால், அவர்கள் சொல்வதை தட்ட முடியவில்லை.

எங்கள் நிறுவனத்தின் நிதியை செலவு செய்து, அவர்கள் தரும் அடையாள அட்டைகளை, மாற்றுத் திறனாளிக்கு அனுப்பி வருகிறோம்.கொரோனா காலகட்டத்தில், ஸ்மார்ட் கார்டு தொடர்பான் பணிகளை சரியாக பார்க்கவில்லை என குற்றம்சாட்டி, தொண்டு நிறுவனங்களுக்கு முழுமையாக நிதியை வழங்காமல், மாவட்ட அலுவலர்கள், அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர்.ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்த, சிறப்பு பள்ளிகளை ஆய்வு செய்ததாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேள்வி

ஊரடங்கு காலத்தில், தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, அரசு ரத்து செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகைகளை, உடனடியாக வழங்க வேண்டும்.ஸ்மார்ட் கார்டுகளை, தொண்டு நிறுவனத்தின் செலவில் தான் அனுப்ப வேண்டும் என, ஆணையர் கூறியபடி நடப்பதாக, மாவட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, ஆணையர் அலுவலகத்தில், புகார் அளிக்க தயக்கமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தபாலில் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்ப, நிதி ஒதுக்கப்பட்ட பின்னும், தொண்டு நிறுவனங்கள் செலவில், அதை பயனாளிகளுக்கு வினியோகிக்கும் முடிவை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர் ஏன் எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், மத்திய அரசு வழங்கிய நிதியில் பெருமளவு முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி, அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.(

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.