"மின்வெட்டு".. தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.. வடக்கைப் பாருங்க.. 8 மணி நேரமாம்!

ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலக்கரி தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்திக் குறைவும் வெகுவாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில மணி நேரங்கள்தான் மின்சாரம் ரத்தாகிறது. ஆனால் வடக்கில் 8 மணி நேரம் வரை மின்சார வெட்டு அமல்படுத்தப்படுகிறதாம்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மத்திய மின் தொகுப்பில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டது. மத்திய அரசு, மாநிலங்களுக்குத் தர வேண்டிய மின்சாரம் இப்போது தடைபட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மின் தடையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் இந்தியா இருள் சூழ்ந்த நாடாக மாறும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். மின் தேவை அதிகரித்துள்ள நிலையிலும் கூட அதற்கேற்றார் போல உற்பத்தி இல்லாமல் போய் விட்டதால் இந்த கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை விட முக்கியமாக நிலக்கரி கையிருப்பு அடியோடு குறைந்து போய் விட்டது. இதுதான் மின் உற்பத்தி கடுமையாக குறைய முக்கியக் காரணம்.

மின் பற்றாக்குறை காரணமாக மாநில மின்வாரியங்கள் கடுமையாக திணறுகின்றன. மின்சாரம் வழங்குவதில் பெரும் குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. இதனால் மாநில அரசுகள் மீது பழி வந்து சேரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே
மின்வெட்டு
அமலாகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை போல. வட மாநிலங்களில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை அமலாகிறதாம். ஆந்திரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின்சாரம் மிகப் பெரிய அளவில் தடை பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பெரும்பாலான இடங்களில் 8 மணி நேர மின் தடை அமலில் உள்ளது.

வட இந்தியாவில் மின் தட்டுப்பாடு , மின் தடை என்பது வழக்கமானதுதான் என்றாலும் தற்போது நிலைமை மோசமாக இருப்பதாக சொல்கிறாரக்ள். இந்தியாவின் மின் உற்பத்திக்கு நிலக்கரி மிகப் பெரிய தேவையாக உள்ளது. இந்திய மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியிலிருந்துதான் வருகிறது. 3 டிரில்லியன் பொருளாதாரமாக தன்னை உயர்த்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கும் இந்தியாவுக்கு இந்த மின் தட்டுப்பாடும், தடையும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நிலக்கரியை விட்டு விட்டு மாற்று மின்சார உற்பத்திக்கு இந்தியா தன்னை மாற்றிக் கொ ண்டால் மட்டுமே அது நினைப்பதெல்லாம் நடக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

மின்தடை காரணமாக தொழில்துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். மின் தடைக்கு கட்சிகளையும், ஆட்சிகளையும் குறை சொல்வதற்குப் பதில் அனைத்து அரசுகளும் இணைந்து ஒருமித்து இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிகளை ஆராய்வதே நாட்டுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது என்றும் நிபுணர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.