விஜயவாடா:
ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வாங்கிய ஒரே நாளில் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஜயவாடாவை சேர்ந்த சிவகுமார் என்பவர் நேற்று புதிய மின் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இன்று அதிகாலை அவர் வீட்டின் முன் அறையில் வாகனத்தை வைத்து சார்ஜ் போட்டிருந்தனர். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் படுக்கையறையில் தூங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி திடீரென வெடித்தது.
இதை தொடர்ந்து வீட்டின் மின் வயர்கள் பற்றி எரிந்து புகை வெளியேறியது. இதனால் அறையில் மாட்டிக்கொண்ட அனைவர் மீதும் தீ பரவியது.
இதில் சிவகுமார் உடல் கருகி உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சமீபகாலமாக தொடர்ந்து மின் ஸ்கூட்டர்கள் வெடித்து விபத்து ஏற்படுத்துவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.