மும்பை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவ துவங்கி இருக்கும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் 2019ல் பரவிய கொரோனா 2020ல் உலகம் முழுவதும் கோரத்தாண்டவாடியது. இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2வது மற்றும் 3வது அலையும் பரவி மக்களை தாக்கியது. கொரோனா பரவலை பட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 2021 ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது.சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவற்றின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வந்து முதல் மற்றும் 2 கட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து வருவதால், பல மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றின் 4வது அலை பரவல் ஏற்பட்டு விட்டதோ என அஞ்சும் அளவுக்கு தொற்று பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் சீரான அளவில் உயர்ந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; – இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15079ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,656 பேர் குணம் அடைந்தனர். குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 68ல் இருந்து 4 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 724ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 187.46 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடிக்கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் கடந்த ஆண்டு இறுதியில் உற்பத்தியை நிறுத்திவிட்டோம் என கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியதாவது: தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் எங்களிடம் தற்போது கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியே நிறுத்தி விட்டோம். விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள் எங்களிடம் உள்ளது. இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவும் நான் முன்வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். மீண்டும் கொரோனா பரவ துவங்கி உள்ள நிலையில், தடுப்பூசி தயாரிப்பை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம்ஆதர் பூனவாலா மேலும் கூறுகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி, 2வது டோஸ் போட்டதில் இருந்து 9 மாதங்கள் என்றிருப்பதை 6 மாதங்களாக குறைப்பது பற்றி அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.