நியூயார்க் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய, உக்ரைன் அதிபர்களை ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் சந்தித்து பேச உள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிடம், தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் பல முறை வலியுறுத்தினார். அத்துடன், போர் நிறுத்தம் தொடர்பாக பேச, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய தலைவரை ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
எனினும், அன்டோனியோ குட்டரஸ் அந்நாடுகளுக்குச் செல்லவில்லை. உலக நாடுகளின் அமைதிக்காக பாடுபடும் ஐ.நா., அமைப்பின் பொதுச் செயலர் நேரடியாக போர் நிறுத்த பேச்சில் ஈடுபடாமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து வரும், 26ம் தேதி அன்டோனியோ குட்டரஸ், ரஷ்ய அதிபர் புடின், வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்து, போர் நிறுத்தம் தொடர்பாக பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து, 28ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இருவருடனும் பேச்சு நடத்த உள்ளார். கடந்த, 2014ல் உக்ரைனின் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தபோது, அப்போதைய ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்குச் சென்று அமைதிப் பேச்சில் ஈடுபட்டார்.
Advertisement