தெஹ்ரான்: ஈரானும் சவூதி அரேபியாவும் ஐந்தாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தையை பாக்தாத்தில் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை ஈரான் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், ‘இராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரானும் சவுதி அரேபியாவும் ஐந்தாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த தேதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. பேச்சுவார்த்தையில் ஈரானின் சுப்ரீம் நேஷனல் செக்யூரிட்டி கவுன்சில் பிரதிநிதிகள் மற்றும் சவுதி அரேபியாவின் உளவுத்துறை தலைவர் காலித் பின் அலி அல் ஹுமைதான் ஆகியோர் கலந்துகொன்டனர். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முக்கிய சவால்கள், எதிர்காலத்திற்கு தேவையான நேர்மறையான சூழல்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஷியா மத குரு ஒருவரை சவுதி அரேபியா தூக்கிலிட்டதைத் தொடர்ந்து, ஈரானில் சவுதி தூதரக அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தன. இந்த நிலையில், ஈரான் – சவுதி அரேபியா இடையே கடந்த ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது.
ஈரான் முன்னாள் அதிபர் ஹசன் ரவ்ஹானி ஆட்சியில் இருக்கும்போது சவுதியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தற்போது ஈரானின் அதிபராக உள்ள இப்ராஹிம் ரைசி தொடர்கிறார்.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும், இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தின. இதனால் ஈரான் – சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.