புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது.
மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு வேண்டும் என விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்ள, விரைவிலேயே சொந்த வீடு அமையும் என்பதும் ஐதிகம்.
வாஸ்து பூஜை
கர்ப்பகிரகத்தில் பூமிநாதர் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாகக் காட்சி தருகிறார். பதினாறு செல்வங்கள் பெறவும், வீடு மனைகளில் யோகம் உண்டாகவும் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு வாஸ்து நாளன்றும், இக்கோயிலில் விசேஷ ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
சுவாமிக்கு 11 விதமான அபிஷேகங்களும் நடத்தப்படும். இன்று வாஸ்து தினத்தை ஒட்டி, காலையில் சுவாமி சந்நிதி முன்மண்டபத்தில் விசேஷ ஹோமங்கள் தொடங்கியது. ஆலய அர்ச்சகர் ராஜப்பா தலைமையிலான அர்ச்சகர்கள் ஹோமத்தை நடத்தினர்.
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல் வழிபாடு
சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் தங்களது தொழில் சிறக்கவும் இங்கு வழிபடுகிறார்கள்.