மும்பை: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேவின் வீட்டின் முன் ஹனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்திருந்த எம்பி நவநீத் ரானா, அவரது கணவர் எம்எல்ஏ ரவி ரானா இருவரையும் மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அமராவதி தொகுதி எம்பி, நவநீத் ரானாவும் அவரது கணவர் எம்எல்ஏ ரவி ராணாவும் மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேவின் தனிவீடான மாதோஸ்ரீ முன்பு ஹனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரையும் அவர்கள் இல்லத்தில் வைத்து மும்பை போலீஸார் கைது செய்தனர். இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 153 (ஏ), பிரிவு 135 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் போலீஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை பந்த்ரா விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில் “இந்த மொத்த விவகாரத்தில் ஆளும் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் செயல்கள் அனைத்தும் குழந்தைத் தனமாகவே உள்ளது. அரசு தனது தோல்வியை மறைக்க இந்த விவகாரம் பாஜகவின் ஆதரவினால் நடந்தது எனக் கூறுகிறது. ரானா தம்பதிகள் மாதோஸ்ரீக்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஹனுமன் சாலிசாவை ஓதிவிட்டு அமைதியாக திரும்பியிருப்பார்கள். அவர்கள் ஏதோ தாக்குதலுக்கு திட்டமிடுவது போல பல இடங்களில் ஏன் பலர் கூடினார்கள் என்று எனக்கு புரிவில்லை. என்ன அரசியல் இது?” என்று கூறினார்.