சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. இதன்தொடர்ச்சியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மத்திய தொகுப்பில் இருந்து நேற்று 22 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி சென்னை வந்தது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர் என 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் வந்த பரிசோதனை முடிவுகளில் கூடுதலாக 18 பேருக்கும், நேற்று மேலும் 25 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் சென்னை ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் நிலையில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத 54 லட்சம் பேருக்கும், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.46 கோடி பேருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரேநாளில் தடுப்பூசி செலுத்துவதற்காக மே மாதம் 8-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதேநேரத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு அவரவர் செல்போனுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே நேற்று மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 22 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன. அவை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. இதனை நேற்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி வளா கத்தில் இதுவரை 1,420 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே இருப்பதால், அனைவரும் பாதுகாப்பாக ஐஐடி வளாகத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அனைவருக்கும் விடுதியின் மூலம் கரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு, 13 மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களில் யாரோ ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவி இருக்கலாம். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். படிப்படியாக தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
‘எக்ஸ்.இ’ வகை கரோனா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இல்லை. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐஐடியில் 514 பேரை பரிசோதித்ததில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டப்பின் தொடர்ந்து அதிகரித்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தமிழக அரசின் கையிருப்பில் 1.56 கோடி தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒரே நாளில் மக்கள் அனைவரும் வந்தாலும் நாங்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தற்போது அதிகரிக்கும் கரோனா அனைவருக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அனைவரும் கவனமாக இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியை அரசு மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ரூ.386 கட்டணம் செலுத்தி பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். விரைவில் அவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.