KKR vs GT highlights: அரைசதம் விளாசிய கேப்டன் பாண்டியா… பந்துவீச்சில் மிரட்டிய குஜராத் கொல்கத்தாவை சாய்த்தது!

KKR vs GT highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று மாலை 30 மணிக்கு தொடங்கிய 35வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனால், கொல்கத்தா அணி பந்துவீசியது.

குஜராத் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாண்டியா அரைசதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ரன்களை சேர்த்த அவர் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 67 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மேலும் அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 25 ரன்களும், டேவிட் மில்லர் 27 ரன்களும், ராகுல் தெவாடியா 17 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் சிவம் மாவி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 157 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு சரியான தொடக்க கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு சிக்ஸர். ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்னில் அவுட் ஆனார்.

கொல்கத்தா அணியின் தொடர் விக்கெட் சரிவை மீட்டு நிதானம் காட்டிய ரிங்கு சிங் 35 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் வெற்றிக்காக முழுமூச்சாக போராடிய ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்த நிலையில், குஜராத்துக்கு வெற்றி பிரகாசமானது. அவர் களத்தில் இருந்தவரை தனது அதிரடியால் குஜராத் அணியினருக்கு பயம் காட்டி இருந்தார். 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரஸல் ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா அணி 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. குஜராத் அணியில் முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

நடப்பு தொடரில் நடந்த 7 ஆட்டங்களில் 6 வெற்றிகளை ருசித்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 5 தோல்வி, 3 வெற்றிகளை பெற்றுள்ள கொல்கத்தா 7வது இடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.