இந்தியாவில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,593 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, முன்னேச்சரிக்கை நடவடிக்கைள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் 2000 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுஇடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நாளை காலை தலைமைச் செயலாளர், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். மருத்துவத்துறை செயலாளரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதுதவிர, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி வாயிலாக நாளை காலை 9 மணிக்கு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அடுத்த தேவையான டேட்டாவை திரட்டவும், கொரோனா பரவல் கட்டுப்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கவும், முதல்வரின் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஐ.ஐ.டி வளாகத்தில் 2,015 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 60 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி முதல் இன்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உள்ளது.கடந்த 4 நாட்களில், பாதிக்கப்பட்ட40 மாணவர்களுக்கு தொற்று இல்லாத நிலை உறுதியாகி உள்ளது.
தற்போது 20 பேருக்கு மட்டுமே மிதமான தொற்று பதிப்பு உள்ளது. எனவே யாரும் பயப்பட தேவையில்லை. முதல் அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மே-8ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சுமார் 54 லட்சம் பேர் முதல் தவணை (தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருப்பவர்கள்) தடுப்பூசியும், 1 கோடியே 46 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட வேண்டியிருக்கிறது.எனவே, இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.