அமித் ஷா அடித்த அந்தர் பல்டி!

புதுச்சேரியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
நேற்று மாலை தமிழகம் வந்தார். சென்னை ஆவடி சிஆர்பிஎஃப் முகாமில் தங்கிய அவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார். சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக, பீகாரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். பீகார் மாநிலம் ரோத்தாசில் உள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “ஒருவர் தாம் விரும்பும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் மக்கள் தமது தாய்மொழியை மறந்துவிடக்கூடாது. தாய்மொழியைப் பயன்படுத்துவதோடு, அதன் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். தாய்மொழிதான் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் கைகொடுக்கும்.” என்றார்.

பெற்றோர் தமது குழந்தைகள் தாய்மொழியில் பேச ஊக்குவிப்பதே நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் என்று தெரிவித்த அவர், பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவால் தற்போது பிற நாடுகளுடன் போட்டியிட முடிகிறது. இளைஞர்களுக்கான ‘ஸ்டார்ட்அப்’ போன்றவற்றுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிறரின் நலனுக்காக இளைஞர்கள் ஒத்துழைக்கவும், பாடுபடவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என்று பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலின் தவிர தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தி பேசாத மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பீகார் மாநிலத்தில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து அமித் ஷா பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

அமித் ஷா இதுபோன்று பேசுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய போதும் கூட, “நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று பேசி விமர்சனத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.