கீவ் : உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சரிடம், ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவும்படி கோரிக்கை வைக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த இரண்டு மாதங்களாக, ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தினரும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, உக்ரைனின் மரியுபோல், கார்கிவ், லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களில், ரஷ்யப் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
போர் துவங்கியது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த துறைமுக நகரமான மரியுபோலை, கைப்பற்றிவிட்டதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில், உக்ரைனுக்கு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் மற்றும் ராணுவ அமைச்சர் லாய்டு ஆஸ்டின், பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, அவர்கள் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சந்திப்பில், உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவுமாறு, அவர்களிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக, அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Advertisement