அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை- கமல்ஹாசன்

சென்னை:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் காணொலி மூலம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராம சபைகள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் மக்கள் நீதி மய்யத்தின் பணி மகத்தானது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்த வெற்றி.

கிராமசபை கூட்டங்களை வருடத்துக்கு 6 ஆக உயர்த்திய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள்.

கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதாது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவதை மக்கள் கண்கூடாக பார்க்க வேண்டும். அப்போது தான் கிராம சபை கூட்டங்களுக்கு முழு வெற்றி கிடைத்ததாக அர்த்தம். இல்லாவிட்டால் 6 ஆயிரம் கிராம சபை கூட்டங்களை நடத்தினாலும் எந்த பலனும் இல்லை.

அரசியல் கட்சிகளிடம் உண்மையாக நாங்கள் எதிர்பார்ப்பது மக்கள் நலன் என்பதை மட்டும் தான். மக்கள் நலன் என்ற பாதையில் இருந்து அரசியல் கட்சிகள் நழுவிவிடக் கூடாது. நான் அரசியலுக்கு வந்ததும், நாம் அரசியலுக்கு வந்ததும் அதற்காகத்தான். அதில் கொஞ்சம் கூட நழுவாமல் மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது.

சுய நலத்துக்காகவும், ஆதாயங்களுக்காகவும் எடுக்கப்படும் முடிவுகளை விமர்சிப்போம். மாற்றங்களை கொண்டு வந்தால் வரவேற்போம். பாராட்டுவோம். அரசியலில் உறவும் தேவையில்லை. பகையும் தேவையில்லை.

மக்கள் நீதி மய்யம் பா.ஜனதாவின் ‘பி’ டீம் என்று தி.மு.க. விமர்சித்தது. ஆனால் இப்போது அவர்கள் தான் ‘பி’ டீமாக செயல்படுகிறார்கள்.

கிராமசபை கூட்டத்துக்கான அமர்வுப்படி 5 மடங்காக உயர்த்தப்பட்டதில் சந்தோஷம். ஆனால் அதன் அளவு போதாது என்பதே எண் கருத்து. இங்கு 5 மடங்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை விட அதிகமாகவே அண்டை மாநிலமான கேரளாவில் வழங்குகிறார்கள். அதைப் போல் இங்கும் அதிகமாகவே வழங்க வேண்டும்.

நல்ல ஊதியம் கொடுத்தால் தான் வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வு வரும். இல்லாவிட்டால் கல்லாவில் கை வைக்கும் உணர்வு தான் வரும்.

சம்பளத்தை அதிகமாக கொடுத்தால் இவ்வளவு சம்பளத்தை வாங்கி கொண்டா தவறு செய்கிறாய் என்று கேள்வி கேட்க முடியும்.

அன்றாட அரசியலில் எல்லா கருத்துக்களுக்கும் எதர்கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பதே எதிர்கட்சிகளின் வேலை அல்ல. நல்லதை நிச்சயம் பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக்கேட்போம். விமர்சிப்போம்.

அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுனர் நிறைவேற்றவில்லை. விளையாடி கொண்டிருக்கிறார். அதைப்பற்றி பேச வேண்டாமா என்பீர்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? ஜனநாயகம் இருப்பது போல் பிரம்மை தெரிகிறது. ஆனால் ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் தான் இருக்கிறது.

அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொள்கிறார்கள். மக்களை கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அதிகாரம் மக்கள் கைக்கு செல்ல வேண்டும். அதை நோக்கியே நமது பயணம். அதற்கான கட்டமைப்புகளைத்தான் கட்டமைத்து வருகிறோம். தலைவர்கள் என்று தங்கள் பெயர்களுக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவர் என்பது மக்களுக்கு சேவை செய்ய கொடுக்கப்பட்ட பொறுப்பு. அதை உரிமையாக எடுததுக்கொள்ள கூடாது. நாம் அனைவரும் மக்களின் வேலையாட்கள்.

கிராம சபை கூட்டங்களை அதிக அளவில் நடத்த வேண்டும். அதேநேரம் கண் துடைப்புக்காக நடத்தி விடக்கூடாது. இரண்டு மூன்று ஆண்டுகளாக நடத்துகிறோம். எந்த மாற்றமும் வரவில்லை என்று சோர்ந்து விட கூடாது. நம்பி செயல்படுவோம். நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல் முன்னிலையில் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அந்த உறுதி மொழிகள் வருமாறு:-

நிலைத்த வளர்ச்சிக்கு மையமாக இருப்பது மக்களே என்பதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு எங்களுக்கு பயன்தரக்கூடிய, ‘அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும்’, ‘சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும்’ மேம்படுத்துவோம்.

நாங்கள் சுதந்திரம், அமைதி, பாதுகாப்பு, நல்ல ஆளுமை, சட்டவிதிகள் வளர்ச்சிக்கான உரிமைகள், மேம்பட்ட வாழ்க்கைச் சூழலுக்கான உரிமை, நல வாழ்விற்கான உரிமை, உணவுக்கான உரிமை, உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறோம்.

நம்முடைய நல்ல எதிர்காலத்திற்கும், நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சிக்கும் ‘பாலின சமத்துவம்’ மற்றும் ‘பெண்களை ஊக்கப்படுத்தி அதிகாரம் அளித்தல்’ மூலமாகத்தான் இயலும் என்பதை உணர்ந்துள்ளோம்.

அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளித்து, குறிப்பாக குழந்தைகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பாதுகாப்புடன் வாழவும் வளரவும் நடவடிக்கைகள் எடுப்பதை நாங்கள் நம்புகிறோம்.

மக்களை மையப்படுத்தி, நிலைத்த வளர்ச்சியை சமுதாயத்தில் உள்ள பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் ஆகியோரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பருவநிலை மாற்றத்தின் விளைவாக நெருக்கடிகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன என்றும் இத்தகைய நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் அளவு எங்களை மிகவும் பாதிக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.

பூமி மற்றும் அதன் சூழல் அமைப்புதான் நம் வாழ்விடம் என்றும், அத்தகைய பூமித்தாயின் ஆரோக்கியத்தையும், நேர்மையையும் மீட்டு எடுப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.