புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150ஆண்டு விழவைத் தொடக்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 48 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரிக்கு அரசுமுறைப் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்.
புதுச்சேரி ஈசுவரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்ற அமித்ஷா அங்குப் பாரதியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர், அன்னை ஆகியோரின் சமாதிகளிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமித் ஷா.
புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150ஆவது ஆண்டு விழாவைக் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்த அமித்ஷா, அங்கு 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட புரட்சியாளர் அரவிந்தர் எனத் தெரிவித்தார். புதுச்சேரிக்கு வந்தபின் அரவிந்தர் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.