அவதூறான தலைப்புச் செய்தி: மத்திய அரசு எச்சரிக்கை!

ஊடகம் என்பது அரசியல், பொருளாதாரம் என எந்தவொரு நெருக்கடியும் இல்லாமல் சாமானிய மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அரசாங்கம் அதன் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக பரபரப்புக்காகவும், மக்கள் தங்களது செய்திகளை படிக்க வேண்டும் என்பதாலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை வெளியிடுவதும், வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் செய்திக்கான தலைப்புகளை வைத்து செய்தியினுள் ஒன்றுமே இல்லாத விஷயத்தை கூறுவதும் அதிகரித்து வருகிறது.

பரபரப்புச் செய்திகளின் மீது ஈர்ப்பு கொள்வது மக்களின் இயல்பாக இருக்கும் நிலையில், பெரும்பாலும் பரபரப்புச் செய்திகள் போலியானவையாக இருக்கின்றன. அதுவும் சமூக வலைதளங்களில் இவை வேகமாகப் பரவுகின்றன. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதையும், அவதூறான தலைப்புச் செய்திகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்
அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்மையில் பல்வேறு தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமற்ற, தவறான செய்திகள் வெளியிடுவதையும், சமூகத்தில் ஏற்று கொள்ள முடியாத மொழிகளை பயன்படுத்துவதையும் அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை

உக்ரைன்- ரஷ்யா விவகாரம், டெல்லி வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அவை நெறிமுறை கோட்பாட்டை மீறியதாக இருந்ததாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவ காட்சிகள் ஒளிபரப்புவதன் மூலம் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இட்டுக்கட்டப்பட்ட தலைப்பு செய்திகள் சமூக விரோத செயலுக்கு வழிவகுப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தேவையற்ற விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும், அமைச்சகத்தின் அறிவுரைகள் www.mib.gov.in என்ற இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.