ஸ்ரீகாகுளம் : ஆந்திராவில் உள்ள கிராமத்தை ஆவிகள் சுற்றி வருவதாக நம்பிய மக்கள், அவற்றை விரட்டும் பூஜைகள் நடத்த ஊரடங்கை அமல்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் நடந்த வினோத சம்பவம், அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சருபுஜ்ஜிலி கிராமத்தை ஆவிகள் சூழ்ந்துள்ளதாக நம்பிய மக்கள், அவற்றை விரட்ட பூஜை செய்து வருகின்றனர். இதற்காக, 17 – 25 தேதிகளில் யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என, ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:கிராமத்தில் பல ஆண்டுகளாக அமாவாசை சிறப்பு பூஜை நடத்தப்பட்டதால், மக்கள் நலமாக இருந்தனர். சில ஆண்டுகளாக பூஜை நடக்கவில்லை. இதனால், மூன்று மாதங்களில் கிராமத் தலைவர் உட்பட ஐந்து பேர் அடுத்தடுத்து இறந்தனர். இது குறித்து மந்திரவாதியிடம் கேட்ட போது, கிராமத்தை ஆவிகள் சூழ்ந்துள்ளதாக கூறினார். அவற்றை விரட்ட பூஜை நடத்தப்படுகிறது.
இந்நாட்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என ஊரடங்கை அமல்படுத்தினோம். கொரோனாவை விரட்ட நாட்டில் ஊரடங்கு அமலானது போல், ஆவிகளை ஒழிக்க ஊரடங்கு பிறப்பித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையறிந்த போலீசார் நேற்று முன்தினம் கிராமத்திற்கு சென்றதை அடுத்து, ஊரடங்கு முடிவிற்கு வந்துள்ளது.
Advertisement