காபூல்: ஆப்கானிஸ்தானில் டிக் டாக், பப்ஜி போன்ற செயலிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற செயலிகளால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதாகக் கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான ஹமீது கர்சாயும் நாட்டைவிட்டு தப்பியோடினர். இந்நிலையில், ஆட்சி தலிபான்கள் வசம் வீழ்ந்தது.
தலிபான் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்தே அங்கே இசை, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தடை வந்துவிட்டது. பெண் கல்விக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் தவிர்த்து பெண்கள் வேலை செய்வதற்கும் பெரிதாக அனுமதியில்லை.
பெண்களுக்கான அழகு நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆண்கள் தாடியை எடுக்ககூடாது, தலை முடியை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் வந்துவிட்டன. அண்மையில், மது விற்பனை செய்ததற்காகவும், அருந்தியதற்காகவும் 6 பேருக்கு பொது இடத்தில் கசையடியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது செல்போன் செயலிகளான டிக் டாக், பப்ஜி ஆன்லைன் விளையாட்டு ஆகியனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் தொலைத்தொடர்பு இதனை அறிவித்துள்ளது.
அண்மையில், ஆப்கன் மக்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 94% பேர் தங்களின் வாழ்வு மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அமைதியும், சுதந்திரமும் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் எவ்வித பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத சூழலில் இதுபோன்ற செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் எனக் கூறப்படுகிறது.