பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கேவ்ராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் சுனில் குமார், நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிகாக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், அவரது வீட்டில் உள்ளவர்கள் இறந்து கிடப்பதாக தர்வாய் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது வீட்டில் ராஜ்குமார் (55), அவரது மனைவி குசும் (50), மகள் மனீஷா(25), மருமகள் சவீதா(30), பேத்தி மிதாக்ஷி(2) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்து இருந்தது. அனைவரும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 7 சிறப்பு தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த படுகொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சாடியுள்ளது. இதேபோல் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.