குமி கபூர்
பிரசாந்த் கிஷோர் 2024ம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார், பிற எதிர்க்கட்சிகளுடனும் தொடர்பில் இருக்கிறார். அவற்றில் பல கட்சிகளின் தலைவர்கள் அவருடைய வாடிக்கையாளர்களாக உள்ளனர். (கோப்பு)
பலன் தரும் பலியாடு
காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமையேற்கச் சரியானவர் என்று பிரசாந்த் கிஷோரின் பெயரை பிரியங்கா காந்தி வத்ரா முதன்முதலில் பரிந்துரைத்தபோது, பொதுவான ஒரு எதிர்ப்பு கிளம்பியது. ராகுல் காந்தியின் நெருங்கிய சகாக்கள் கூட தங்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டு விடும் என கருதி எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் கிஷோரை நேரில் சந்தித்து, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எப்படிக் கையாள்வது என்பது குறித்து கிஷோரின் விளக்கத்தைக் கேட்டபின்னர், காந்தி குடும்பம் அவரது யோசனைக்கு நெருக்கமாக வந்ததாகத் தெரிகிறது. காந்தி குடும்பத்தைப் பொறுத்தவரை, கட்சி மீண்டும் மக்களின் வாக்குகளைப் பெற தவறிவிட்டால் கிஷோர் ஒரு வசதியான பலிகடாவாக ஆக்கப்படுவார். வழக்கமாக ராகுல் மீதான இந்த பழிச்சொல் கிஷோருக்கு வந்து சேரும். எந்தவொரு வெற்றியும் இன்னும் காந்தி குடும்பத்தின் காந்தத் தன்மைக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படும். கிஷோருக்கும் காங்கிரஸுக்கும் இடையே எப்படியான பங்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு புள்ளியில்தான் வித்தியாசம் உள்ளது. பிரசாந்த் கிஷோர் 2024ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார், பிற எதிர்க்கட்சிகளுடனும் அவர் தொடர்பில் இருக்கிறார். அவற்றில் பல கட்சிகளின் தலைவர்கள் அவருடைய வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிக்கலான குஜராத் சட்டமன்றத் தேர்தலை கையாண்டு பிரசாந்த் கிஷோர் முதலில் தனது திறமையை சோதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கருதுகிறது. ஆகவே, கிஷோர் ஒரு திட்டத்தைத் தீட்டுவார் என்று எதிர்பார்த்து குஜராத் காங்கிரஸ் தலைமை வெறுமனே காத்திருக்கிறது.
விசுவாசத்தில் சந்தேகம்
ஆனால் காங்கிரஸில் ஒருபோதும் எதுவும் நிலையானதாக இருப்பதில்லை. மேலும் கிஷோர் யார் பக்கம் என்று கட்சியினர் ஏற்கனவே கேள்வி எழுப்பி வருகின்றனர். உதாரணமாக, அசாமில் காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ள ரிபுன் போராவை இந்த வாரம் வாழ்த்தினார், இது அவரது பிளவுபட்ட விசுவாசத்தை அம்பலப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. கிஷோருடனான உரையாடலின்போது மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் அவரை அகமது படேலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முற்பட்டபோது, கிஷோர் தன்னை ஒரு பங்கெடுப்பாளர் என்றும், படேல் கட்சியின் சக்திவாய்ந்த நபர் என்றும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார் என்ற தகவல் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தெலுங்கானா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், பீகார், தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கையை தனிப்பட்ட முறையில் உருவாக்க வேண்டும் என்று கிஷோர் ஒரு அரசியல் திட்டத்தை முன் வைத்துள்ளார். ஆனால் இதனை பிராந்தியக் கட்சிகளோ அல்லது காங்கிரஸோ ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும்.
தகுதியான நபர்
வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளது வியப்பான ஒன்றாகப் பாரக்கப்படுகிறது. தூதுவர் பதவிகளின் அதிகாரப் படிநிலையில் தனிமைப்படுத்தப்பட்ட அதிகம் கவனம் பெறாத நேபாள நாட்டுக்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார். நமது வெளியுறவு செயலாளர்களில் பெரும்பாலனவர்கள் போல ஸ்னோபி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலும் அவர் பட்டம் பெற்றவர் அல்ல. உண்மையில், குவாத்ராவின் தகுதிகள் பிரதமருக்கு சரியாகப் பொருந்திப்போனது. 2014 தேர்தலுக்குப் பிறகு, மோடி பிரதமராகப் புதிதாகப் பதவி ஏற்றபோது இணைச் செயலாளராக இருந்த குவாத்ரா மோடியின் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட முன்வந்தார், மேலும் அவரது வெளியுறவுக் கொள்கையுடன் கூடிய பதவியின் பின்னணியானது வெளிநாட்டுத் தலைவர்களுடனான கலந்துரையாடல்களை சீராக்க உதவியது. பல வெளிநாட்டு மொழிகளைப் பேசும் பல மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரிகள் ஹிந்தியைப் பயன்படுத்துவதில் தடுமாறிக் கொண்டிருப்பது போலல்லாமல், ஹிந்தியில் சரளமாக பேசத் தெரிந்தவர் என்பது குவாத்ராவின் பலமாக இருந்தது.. குவாத்ரா பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியவர் என்பதால் மோடிக்கும் வசதியாக உள்ளது. பாரிசில் இந்திய தூதராக இருந்த அவர், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இறுதி செய்ததில் முக்கிய பங்கு வகித்தார். இதன் பின்னர் குவாத்ரா 2020 இல் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டார், ஏனெனில் அப்போது வலுவற்ற நிலையில் இருந்த அண்டை நாட்டுடனான உறவை உறுதிப்படுத்த குவாத்ராவைப் போன்ற நம்பகமான ஒருவர் தேவைப்பட்டார்.
நரேஷ் படேலை நாடும் காங்கிரஸ்
குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, படேல் சமூகத்தின் போராட்ட நாயகனாக இருந்த இளம் புயல் ஹர்திக் படலை, ராகுல் காந்தி வலுவாக ஆதரித்தார். பழைய கால காங்கிரஸ்காரர்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், அவர் குஜராத் மாநில செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஹர்திக், ஈர்க்கக்கூடிய பதவியைக் கொண்டிருந்தபோதிலும் கட்சியை நடத்துவதில் தனக்கு எந்த கருத்தும் இல்லை என்று பகிரங்கமாக முணுமுணுக்கிறார். காங்கிரஸுக்கு இப்போது ஹர்திக்கினால் எந்தப் பயனும் இல்லை, அதற்குப் பதிலாக ராஜ்கோட் அருகே உள்ள பட்டேல் சமூகத்துக்கு சொந்தமான கோடல்தாம் கோயிலின் தலைமை பதவியில் உள்ள நரேஷ் படேலை, படேல்களின் பிரதிநிதியாக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்வமாக உள்ளனர். நரேஷ், படேல் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் லியூவா பட்டேல் பிரிவை சேர்ந்தவர் என்பது ஒரு சாதகமான அம்சம். அதே சமயம் ஹர்திக், கத்வா படேல் பிரிவை சேர்ந்தவர். அதைவிட முக்கியமாக, நரேந்திர மோடி, அமித் ஷா, ஆனந்திபென் படேல் போன்று ஹர்திக்கும் வடக்கு குஜராத்தைச் சேர்ந்தவர். (உண்மையில் மோடி, ஷா மற்றும் ஆனந்திபென் ஆகியோரின் வீடுகள் காந்திநகர்-மெஹ்சானா பெல்ட்டில் 70 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன). கடந்த 21 ஆண்டுகளில் தெற்கு மற்றும் மத்திய குஜராத் அல்லது சௌராஷ்டிராவில் இருந்து யாரும் மாநிலத்தில் உண்மையான அதிகாரத்தை செலுத்தவில்லை என்பதால், நரேஷ் சௌராஷ்டிராவை சேர்ந்தவர் என்பது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக கருதப்படுகிறது.
ஊடக நட்பு இல்லை
பெரும்பாலான பஞ்சாப் முதல்வர்கள் பொதுவான ஒரு விஷயத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் உத்யோகப்பூர்வமான செயலகத்தை விட வீட்டிலிருந்து அரசாங்கத்தை நடத்த விரும்பினர். புதிய முதல்வர் பகவந்த் மானும் அதறகு விதிவிலக்கல்ல. மானின் வீடியோக்கள் கூட வீட்டிலிருந்து உருவாக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் அவரது தலைமை செயலக அலுவலகத்தில் அவருக்காக ஒரு ஸ்டுடியோ அமைக்கப்பட்டது, ஆனால் முதல் வீடியோவின் உள்ளடக்கங்கள் கசிந்த பிறகு, அவரது வீட்டில் ஒரு ஸ்டுடியோ ஏற்பாடு செய்யப்பட்டது. ஊடகங்களை ஒதுக்கி வைப்பதில் ஆம் ஆத்மி அரசு பாஜக அரசுகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பப்ளிசிட்டி போலல்லாமல், பஞ்சாபில் ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் ஊடகங்களிடம் பேசத் தயங்குகிறார்கள்
தமிழில்; ரமணி