தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், எல்லைக்கு அப்பால் சதி நடந்தால், அதனை முறியடிக்க நாங்கள் எல்லை தாண்டவும் தயங்கமாட்டோம் என்று, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பேசியதாவது,
“தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்ற தகவலை இந்தியா தெளிவுபட தெரிவித்துள்ளது. இந்திய நாட்டுக்கு எதிராக எல்லைக்கு அப்பால் சதி நடந்தால், அதனை முறியடிக்க நாங்கள் எல்லை தாண்டவும் தயங்கமாட்டோம்.
நாட்டின் மேற்கு எல்லை உடன் ஒப்பிடுகையில் கிழக்குப் பகுதி எல்லையில் தற்போது அதிக அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. வங்கதேச நாடு இந்தியாவின் நட்பு நாடாக இருப்பதால், கிழக்கு எல்லையில் எந்தவித ஒரு பதட்டமும் இல்லை. குறிப்பாக இங்கு ஊடுருவல் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்த பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவிவருகிறது. வட கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார சட்டம் தற்போதுதான் வாபஸ் பெறப்பட்டது.
நிலைமை சீர் அடைந்ததால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இந்த சட்டம் தற்போது அமலில் இருப்பதாக தவறான ஒரு கருத்து மக்களிடம் பரவி வருகிறது. இந்த சட்டம் அமல்படுத்துவதற்கு நிலைமை தான் காரணமே தவிர, ராணுவம் அல்ல” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.