குவஹாட்டி: கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி குவஹாட்டியில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:
தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்ற தகவலை இந்தியா தெளிவுபட கூறியுள்ளது. நாட்டுக்கு எதிராக எல்லைக்கு அப்பால் சதி நடந்தால், எல்லை தாண்ட நாங்கள் தயங்க மாட்டோம்.
நாட்டின் மேற்கு எல்லைகளுடன் ஒப்பிடுகையில், கிழக்கு பகுதி எல்லையில் தற்போது, அதிக அமைதி நிலவுகிறது. வங்கதேசம் நட்பு நாடாக இருப்பதால், கிழக்கு எல்லையில் பதற்றம் இல்லை. இங்கு ஊடுருவல் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது இங்கு அமைதியும், நிலைத்தன்மையும் நிலவுகிறது.
வடகிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார சட்டம் சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது. நிலைமை சீரடைந்தால் அரசு இந்த நடவடிக்கை எடுக்கிறது. இந்த சட்டம் எப்போதும் அமலில் இருக்க, ராணுவம் விரும்புவதாக மக்களிடம் தவறான கருத்து உள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு நிலைமைதான் காரணம், ராணுவம் அல்ல. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.