ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களுரு அணியை பந்தாடிய ஐதராபாத்..!! 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 
இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளிஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். 7 பந்துகளை சந்தித்த கேப்டன் டு பிளிஸ்சிஸ் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கொ ஜன்சன் பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்துவந்த விராட் கோலி முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் முறையில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான அனுஜ் ராவத் தான் சந்தித்த 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் முறையில் அவுட் ஆனார்.

இதனால், 2 ஓவரில் பெங்களூரு அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்துவந்த மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தபோது நடராஜன் பந்து வீச்சில் அவரும் கேட்ச் முறையில் அவுட் ஆனார். இதனால், ஒருகட்டத்தில் பெங்களூரு அணி 4.2 ஒவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து வந்த பிரபுதேசாய் 15 ரன்னிலும், ஷபாஸ் அகமது 7 ரன்னிலும் வெளியேறினார். பின்னர் வந்த பெங்களூரு வீரர்கள் ஐதராபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் (0), ஹர்ஷ் பட்டே 4 ரன்னிலும், ஹசரங்கா 8 ரன்னிலும், முகமது சிராஜ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹேசவுட் 3 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இறுதியில் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக பிரபுதேசாய் 15 ரன்கள் எடுத்தார்.
சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், சுஜித் 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணியில்,  அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் தனது அதிரடியின் மூலம் ரன் ரேட்டை வேகமாக உயர்த்திய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். முடிவில் கேன் வில்லியம்சன் 16 ரன்களும், ராகுல் திரிபாதி 7 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணியின் சார்பில் ஹர்சல் பட்டேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களுரு அணியை  9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஐதராபாத்  அணி, அபார வெற்றிபெற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.