புதுடில்லி : ‘இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் பொதுவான பல அம்சங்கள் உள்ளன. நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வாயிலாக மக்களுக்கும், பருவநிலைக்கும், பூமிக்கும் பல நன்மைகளை செய்ய முடியும்’ என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனின் தலைவராக உர்சுலா வான் டெர் லெயன் பதவி ஏற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே பல பொதுவான ஒற்றுமைகள் உள்ளன. வருகிற 2030க்குள் புதுப்பிக்கதக்க ஆற்றல்களில் இருந்து 50 சதவீத எரிசக்தியை பெறவேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு வரவேற்கக் கூடியது.
சுற்றுச்சுழல் மாசை குறைப்பதில் நாம் சரியான திசையை நோக்கி பயணிப்போம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. சூரிய சக்தி, காற்றாலை, நீர்மின் ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது நம் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மக்கள் நலன் மற்றும் பருவநிலையை பாதுகாக்க உதவும்.
இந்த விவகாரத்தில் இந்தியா, ஐரோப்பிய யூனியன் ஒன்றாக செயல்பட்டால் மக்களுக்கும், பருவநிலைக்கும் இந்த பூமிக்கும் பல நன்மைகளை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement