பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதால் பரபரப்பு!
சென்னையில் இன்று மாலை மின்சார ரயில் ஒன்று நடைமேடையில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் வந்த ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய அந்த ரயில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பணிமனையில் இருந்து ரயில் புறப்பட்டு வந்ததால், பயணிகள் யாரும் ரயிலில் இல்லை. ஓட்டுநர் மட்டுமே காயமடைந்துள்ளதாகவும் பிரேக் சரியாக இயங்காததால் விபத்து நிகழ்ந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விடுமுறை நாள் என்பதால் நடைமேடையிலும் பயணிகள் மிகக் குறைவாகவே இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயில் கட்டுப்பாட்டை இழந்ததும் நடைமேடையில் இருந்தவர்களை விலகிச் செல்லும்படி ரயில் ஓட்டுநர் சங்கர் எச்சரித்துவிட்டு, ரயிலில் இருந்து குதித்து விட்டதாக பயணிகள் தெரிவித்தனர். முதல் நடைமேடையில் விபத்து நிகழ்ந்ததால் தாம்பரம் செல்லும் ரயில் சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. ரயிலை நடைமேடையில் இருந்து அகற்றும் பணிகள் உடனடியாக துவங்க உள்ளதாகவும், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM