கிரிக்கெட் வீரர் சாஹாவை மிரட்டிய விவகாரம் – தொகுப்பாளருக்கு தடை விதித்தது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சாஹாவுக்கு மிரட்டல் விடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளர் போரியா மஜும்தாருக்கு கிரிக்கெட் போட்டிகளை காண தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்குபவர் விருத்திமான் சாஹா. 37 வயதான அவர் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் சாஹா ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். அதில், பேட்டி தராததற்காக தனக்கு ஒரு பத்திரிகையாளர் மிரட்டல் விடுத்தாக கூறியிருந்த சாஹா, அதுதொடர்பான வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டுகளையும் பகிர்ந்திருந்தார்.
image
“இந்திய கிரிக்கெட் அணிக்காக நான் அளித்த பங்களிப்புக்காக மாண்புமிகு பத்திரிகையாளர் ஒருவரிடமிருந்து நான் பெற்றது இதுதான்” எனவும் அவர் ட்வீட் செய்திருந்தார். இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பியது. பல கிரிக்கெட் வீரர்கள் சாஹாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பிசிசிஐ இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அப்போது தன்னை மிரட்டியவர் பிரபல கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் போரியா மஜும்தார் என சாஹா தெரிவித்தார்.
image
இதையடுத்து, போரியா மஜும்தார் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிசிசிஐ இன்று சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “போரியா மஜும்தாரை எந்த கிரிக்கெட் அரங்கத்துக்குள்ளும் நுழைய அனுமதிக்கக் கூடாது. பிசிசிஐ-யின் கீழ் செயல்பட்டு வரும் மாநில அமைப்புகள் இதனை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவுக்குள் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்க அவருக்கு ஊடக அங்கிகார அட்டை வழங்கப்பட கூடாது. மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை காணவும் அவருக்கு தடைவிதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ஐசிசி) நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவருக்கு இந்த தடையை இரண்டு ஆண்டுகள் விதிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.