குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் கும்ரம்லையில் அமைந்துள்ளது.
வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது. பங்குனி உத்திரத்தன்று, பத்தாம் திருநாளில் அருகிலுள்ள குன்னக்குடிப்பட்டியிலுள்ள வெள்ளாற்றில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.
குமரமலை முருகனின் பக்தர் முத்துமீனாட்சி கவிராயர் தினசரி மலை அடிவாரத்தில் உள்ள சங்குக் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நாள்தோறும் வழிபட்டு முருகன் சந்நிதிமுன் அமர்ந்து தவம் செய்து தினமும் ஒரு பாடல் வீதம் 100 பாடல்களைப் பாடி முடித்தார்.
அவர் எழுதிய 100 பாடல்களையும் நூலாகத் தொகுத்து “குமரேச சதகம்’ என்று பெயரிட்டு, தன் பெய ரையும் “குருபாத தாசர்’ என்று மாற்றிக் கொண்டார். அந்த நூல் பக்திப் பாடல் மட்டுமல்ல; ஒவ்வொருவரும் படித்து, உணர்ந்து, நடைமுறைப்படுத்த வேண்டிய அறநூல்.
இந்தக் குமரமலை குமரேசனை வழிபடும் பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அடைகிறார்கள். நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் நோயற்ற வாழ்வும் மணமாலையும் மக்கட் பேறும் கிடைக்கும்.