பரிதாபாத்: பரிதாபாத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஓட்டலில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 ஆண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலத்தில் 2020ம் ஆண்டு பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியரை, அதே நிறுவனத்தை சேர்ந்த ஐந்து ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒரு வேலை இருப்பதாக கூறி, அவருக்கு அறிமுகமான மற்றொரு பெண் கடந்த 2020ம் ஆண்டு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ஒரு அறையில் பாதிக்கப்பட்ட பெண்ணை உட்கார வைத்தார். பின்னர் குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்தவுடன் அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண் மயக்கமடைந்தார். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து வந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சில மணி நேரங்கள் கழித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுயநினைவு வந்துள்ளது. தனக்கு நேர்ந்த பலாத்கார கொடுமையை குறித்து, அங்கிருந்தவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அந்த பெண்ணை ஆபாசமாக எடுத்த வீடியோவை காட்டி மிரட்டி உள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் வேறுவழியின்றி அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதன்பின் அந்த வீடியோவை காட்டி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக 5 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த பெண், போலீசில் புகார் அளிப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்தப் ெபண் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்துள்ளோம்’ என்றார்.