பெங்களூரு:
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. கண்டீரவா ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மல்லர்கம்பம் போன்ற உள்ளூர் விளையாட்டுகளை இப்போட்டியில் சேர்க்கவேண்டும் என்ற யோசனையை வரவேற்றார். உள்நாட்டு விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய அவர், போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் வெற்றிக்கான குழு உணர்வை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘தேசமும் கலாச்சாரமும் இணைந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன. மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டும். மக்கள் இங்குள்ள சிறந்ததை விட்டுவிட்டு மேற்கு நாடுகளைப் பார்க்கிறார்கள்’ என்றும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், கர்நாடக விளையாட்டுத் துறை அமைச்சர் நாராயண கவுடா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் 200 பல்கலைக்கழகங்களில் இருந்து 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.