மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விக்கு இன்றைய போட்டியிலாவது முற்றுப்புள்ளி வைப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். லக்னோ அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் குயிண்டன் டி காக் 10 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் மணீஷ் பாண்டே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குருணால் பாண்டியா 1 ரன்னிலும், தீபக் ஹூடா 10 ரன்னிலும் அவுட் ஆகினர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் சளைக்காமல் மும்பை பந்துவீச்சாளர்களை மிரட்டிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார். 61 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார்.
இதனால், லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக பதோனி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை தரப்பில் பொல்லார்டு, மெரிடித் தலா 2 விக்கெட் எடுத்தனர். டேனியல் சாம்ஸ், பும்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.