கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் வாகனங்களில் சுற்றுலாபயணிகள் வைத்திருக்கும் ஒரு முறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் கொடைக்கானல் நகரின் நுழைவுவாயிலில் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி பறிமுதல் செய்துவருகிறது. இதை மலையடிவாரப்பகுதியிலேயே மேற்கொள்ளவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் மலைகிராமங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் விற்பனை நிறுத்தப்பட்டு ஐந்து லிட்டர் கேன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாவரும் வாகனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் உள்ளனவா என நகராட்சி நிர்வாகம் பணியாளர்களை நியமித்து சோதனை நடத்துகிறது. ஒருவேளை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் தினமும் நூற்றுக்கணக்கான தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்த சோதனைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தபோதிலும் இந்த சோதனையை கொடைக்கானல் மலையடிவாரத்திலிருந்து வாகனங்கள் கொடைக்கானல் மலைச்சாலையில் பயணிக்க தொடங்கும் போதே சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்யவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர். பல கிலோ மீட்டர் தூரம் மலைச்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை வரும் வழியிலேயே வனப்பகுதியில் எறிந்துவிட்டு வரும் நிகழ்வும் நடக்கிறது. மேலும் பாலித்தீன் சீட்களால் சுற்றப்பட்ட உணவுப்பொட்டலங்கள் உள்ளிட்டவைகளும் சாலையோரம் வீசப்படுகிறது. இவற்றை குரங்குள் உள்ளிட்டவை எடுத்துசென்று சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க மலையடிவாரத்திலேயே வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனையை நடத்தினால் வனப்பகுதியில் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும்.
தற்போது இந்த சோதனையை கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் செய்துவருகிறது. மலையடிவாரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளவேண்டும் என்றால் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும். இதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மலையடிவாரத்திலேயே வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும், என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இதன்மூலம் முழுமையாக மலைப்பகுதியை பிளாஸ்டிக் இன்றி பாதுகாக்கலாம். மேலும் கொடைக்கானல் நுழைவுபகுதியில் சோதனை நடப்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அடிவாரம் பகுதியில் சோதனையிட்டால் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கலாம் என்றும் கூறுகின்னறர்.