ஆந்திர மாநிலம்,
ஸ்ரீகாகுளம்
மாவட்டத்தில் அமைந்துள்ளது சருபுஜ்ஜிலி கிராமம். இந்த கிராமத்தில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து 5 பேர் இறந்த துயர சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த மந்திரவாதியிடம் கிராமவாசிகள் கேட்டுள்ளனர். அதற்கு அந்த மந்திரவாதி கிராமத்தை சுற்றி பேய்கள் சூழ்ந்துள்ளதாகவும், இதிலிருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதன்படி, கிராமத்தை சூழ்ந்துள்ளதாக நம்பப்படும் ஆவிகளை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்தவகற்காக சருபுஜ்ஜிலி கிராமம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. நாளை (ஏப்ரல் 25) இந்த சிறப்பு பூஜை நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என
ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று பேய்கள் போன்ற மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். ஆனாலும் போலீசாரின் அறிவுறுத்தலை கண்டுகொள்ளாத கிராம மக்கள் தொடர்ந்து பூஜைக்கு தயாராகி வருகின்றனர்.
‘கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்த அமாவாசை சிறப்பு பூஜை சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த நிலையிவ் கிராமத் தலைவர் உட்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். கிராமத்தை ஆவிகள் சூழ்ந்துள்ளதாக மந்திரவாதி கூறியுள்ளதால் அவற்றை விரட்ட பூஜை நடத்தப்படுகிறது.
இன்று தொடங்கியுள்ள பூஜை நாளையுடன் முடிவடைகிறது. பூஜை நடைபெறும் நாட்களில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம்’ என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.