உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா உள்ளிட்ட 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை குறித்த விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில், மேலும் பலரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்த உள்ளதால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன், விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம், அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் சசிகலா உட்பட 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் சிலர் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தோம்’’ என்றார்.