வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜாபுவா-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,’கடக்நாத்’ எனப்படும், கறுப்பு நிற கோழிகளை, தன் பண்ணையில் வளர்க்கிறார்.
இதற்காக, 2,000 கோழிகள் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வளர்கின்றன, கடக்நாத் எனப்படும் கறுப்பு நிற கோழிகள். புரதச்சத்து அதிகம் உள்ள இந்தக் கோழிகளுக்கு, புவிசார் குறியீட்டையும் மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.
பழங்குடியின மக்களால் வளர்க்கப்படும் இந்தக் கோழி, அம்மக்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்தக் கோழிகளை வாங்கி வளர்ப்பதற்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக பதிவு செய்யும் வசதியையும் அரசு செய்துள்ளது.ஜார்க்கண்டின் ராஞ்சியில் வசித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2,000 கோழிக் குஞ்சுகளுக்கு ஆன்லைன் வாயிலாக பதிவு செய்திருந்தார்.
அதன்படி, மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கம், 2,000 கோழிகளை, தோனியின் ராஞ்சி பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.சாதாரண வகை கோழிகளைவிட, இந்தக் கோழியின் இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement