சென்னை:
சென்னையில் இன்று தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலச்சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலச் சங்கத்தின் தலைவராக பொன்மலையும், ஆசிரியர்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்க தலைவராக பரந்தாமனும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் வந்த போது அரங்கின் முன் பகுதியில் ஆண்களும் பின்னால் பெண்களும் அமர்ந்து இருந்தனர். அதை பார்த்ததும், பின்னால் இருக்கும் பெண்கள் முன்னால் வரவேண்டும். பெண்கள் தான் ஆண்களை முன்னோக்கி செல்ல வைப்பவர்கள்.
ஆண்கள், பெண்கள் எல்லோரும் சரிசமம் தான் ஆண்குழந்தைகள் ஆண்கள் தான். ஆனால் பெண் குழந்தைகள் தேவதைகள். அவர்கள் தான் எனக்கு தெய்வங்கள்.
கோவில் எதற்கு? தெய்வம் எதற்கு? உனது புன்னகை போதுமடி, என்பார் கவிஞர் நா.முத்துக்குமார், பெண் குழந்தைகளின் புன்னகைக்கு ஈடு எது?
சில குழந்தைகளிடம் நான் எதிர் காலத்தில் நீ எதற்கு ஆசைப்படுகிறாய் என்று கேட்டு இருக்கிறேன். அப்போது ஒரு குழந்தை எம்.பி. ஆவேன் என்றும் இன்னொரு குழந்தை ஐ.பி.எஸ். ஆவேன் என்றும் கூறியது. யாரும் சொல்லிக் கொடுக்காமலே யோசிக்கிறார்கள். எனவே பெண்களை போற்றவேண்டும். முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, முன்னாள் துணை வேந்தர் விசுவநாதன், சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவபிரகாசம், பொது செயலாளர்கள் சரவணன், பெருமாள், தாமோதரன், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.