தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியே வந்த யானை கூட்டம் மின் வேலியை கடக்கும் முயற்சியில், கிராம மக்கள் யானைகளை வழிநடத்தி காட்டிற்குள் கடத்தி விட்டனர்.
கோடை காலம் என்பதால் கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் காட்டை விட்டு தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய பகுதிக்கு வருகிறது. வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இருப்பதை வனத்துறையினர் தொடர்ச்சியாக உறுதி செய்ய வேண்டும் எனவும், அதற்காக குழு அமைக்க வேண்டும் எனவும் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் தேவராயபுரம் பகுதியில் மிகச் சிறிய இரண்டு மாதமே ஆன சிறிய குட்டியுடன் மொத்தம் ஐந்து யானைகள் இன்று காலை விவசாய நிலப் பகுதியில் இருந்து மணபதி நோக்கி சென்றது. தண்ணீர் தேடி வந்த யானை குடும்பம், மின் வேலியை கடக்க முயன்றது. அப்போது குட்டியானை மின் வேலியை கடக்க முடியாமல் பின்னோக்கிச் சென்றது.
இதையடுத்து கிராம மக்கள் கம்பியை மிதித்துச் செல்லுமாறு தலைமை யானையிடம் இயல்பாக உரையாடினர். பின்னர் மின்வேலியை தலைமை யானை மிதித்து தரையில் பதிக்க குட்டி யானை பத்திரமாக வேலியை கடந்து சென்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM