திருவனந்தபுரம்: சபரிமலை ஆன்லைன் முன்பதிவை கையாளும் பொறுப்பை 3 மாதத்திற்குள் திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேரள போலீசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை சுவாமியை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர். மண்டல, மகரவிளக்கு சீசன்களில் ஒரே சமயத்தில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூடுவதால் வெகுதொலைவிலிருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தின் உதவியுடன் கேரள போலீசின் கட்டுப்பாட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் எளிதில் தரிசனம் செய்து வந்தனர்.சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை கேரள போலீஸ் தான் முழுக்க முழுக்க நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் முன்பதிவை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கடந்த சில வருடங்களாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள போலீசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இதுதொடர்பாக கேரள போலீஸ் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீது நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதி அனில் நரேந்திரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், சபரிமலை ஆன்லைன் முன்பதிவை கையாளும் பொறுப்பை 3 மாதத்திற்குள் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேரள போலீசுக்கு உத்தரவிட்டது.* போலீஸ் கேட்டால் வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் மேலும், ‘பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் முன்பதிவில் உள்ள விவரங்களை போலீசுக்கு வழங்க வேண்டும். பக்தர்களின் தனிப்பட்ட விவரங்களை தேவசம் போர்டு மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்,’ என்று தெரிவித்துள்ளது.