அரியலூர் மாவட்டம், வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப.இளவரசன். தமிழ்நாடு விடுதலைப்படை என்கிற அமைப்பை நடத்திவந்தார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பிறகு, தமிழர் நீதிக் கட்சி என்கிற ஒரு கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இவர் தற்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 11-ம் தேதி திருமண விழா நடத்தி முடித்துவிட்டு திரும்பியபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் இளவரசன் புகார் அளித்தார்.
அவர் புகாரின் பெயரில், உடையார்பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 நபர்களை அடையாளம் கண்டு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் கீழகுவாகம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் இளந்தமிழன், ஆறுமுகம், சங்கர், வீரபாண்டியன் ஆகிய ஆறுபேர் வெளியில் வந்தால் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும்… சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.
அதையடுத்து, ஆட்சியர் ரமண சரஸ்வதி மேற்கண்ட குற்றவாளிகள் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.