சென்னை,
அரசு முறை பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக சென்னை வந்த அவர், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார்.
அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர் வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து கார் மூலம் காலை 10.20 மணிக்கு ஈஸ்வரன்கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கும் அமித் ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமித்ஷா செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமித்ஷாவை வரவேற்று புதுவை நகர் முழுவதும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பதாகைகள், கொடி தோரணங்களையும் பா.ஜ.க.வினர் கட்டியுள்ளனர்.