சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்த, கடற்கரை நிலையம் – தாம்பரம் புறநகர் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து முதலாம் நடைமேடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பிரேக் சரியாக செயல்படாததால்தான் ரயில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நடைமேடையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில் விபத்துக்குள்ளானபோது, தப்பிப்பதற்காக ஓட்டுநர் ரயிலிலிருந்து வெளியே குதித்ததில், ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், முதலாம் நடைமேடையில் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இந்த விபத்து காரணமாக முதலாம் நடைமேடையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் ரயில்கள், 3-ம் நடைமேடையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விளக்கமளித்த தெற்கு ரயில்வே, விபத்து குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்றும், விசாரணைக்கு பின்னரே விபத்துக்குக் காரணம் ஓட்டுநரின் கவனக்குறைவா… அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது தெரியவரும் என்று கூறியுள்ளது.