சென்னை: சென்னை கடற்கரை மின்சார ரயில் நிலையத்தில், பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரயில் நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் விபத்து: தாம்பரம் செல்வதற்காக மின்சார ரயில் ஒன்று பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை மின்சார ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு இன்று மாலை 4.25 மணிக்கு வந்தது. ரயிலை நிறுத்துவதற்கு ஓட்டுநர் சங்கர் முயன்றபோது, பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த ரயில் நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதையடுத்து ரயில் தனது கட்டுப்பாட்டிலிருந்து விலகியதை உணர்ந்த ஓட்டுநர் சங்கர் ரயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.
முதல்பெட்டி சேதம்: இந்த விபத்தில் ரயில் இன்ஜினுடன் பொருத்தப்பட்டிருந்த முதல் பெட்டி நடைமேடை மீது மோதி சேதமடைந்தது. விடுமுறை தினம் என்பதால், முதலாவது நடைமேடை பகுதியில் மக்கள் கூட்டம் இல்லாத காரணத்தாலும், பணிமனையிலிருந்து வந்த ரயிலிலும் மக்கள் யாரும் இல்லாததாலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
3-வது நடைமேடையிலிருந்து இயக்கம்: இந்த விபத்தின் காரணமாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மேலும், தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் மூன்றாவது நடைமேடையிலிருந்து இயக்கப்பட்டன.
மக்களை எச்சரித்த ஓட்டுநர்: ” ரயில் மெதுவாகத்தான் வந்தது. ரயில் வந்துகொண்டிருக்கும்போதே ஓட்டுநர் ஓரமாக செல்லும்படி சைகை மூலமாக கூறினார். அவரது கட்டுப்பாட்டை இழந்ததால், அவர் கீழே குதித்துவிட்டார். ரயில் சுவற்றில் மோதி நின்றுவிட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
குழு அமைத்து விசாரணை: இந்த விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் கூறுகையில், “இந்த விபத்தில் பயணிகள் யாரும் ரயிலில் இல்லாததால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அதேநேரம் நடைமேடையிலும் எந்த பயணியும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயிலை ஓட்டி வந்த சங்கரும், ரயிலிலிருந்து கீழே குதித்து விட்டதால், அவரும் காயமின்றி தப்பிவிட்டார். அடுத்தகட்டமாக, இந்த விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.