சென்னை:
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இன்று மாலை, மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார ரெயில், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது.
தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கின்றனர். பணிமனையில் இருந்து வந்த ரெயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், டிரைவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விரிவான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்துக்குச் சென்று சீரமைப்புப் பணிகளை தொடங்கியிருப்பதாகவும் தெற்கு ரெயில்வே கூறி உள்ளது.
பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்திற்கான காரணத்தை மதிப்பிடுவதற்கு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக முதலாவது நடைமேடையில் இருந்து ரெயில்கள் இயக்கப்படவில்லை. செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் 3வது நடைமேடையில இருந்து இயக்கப்படுகின்றன.