புதுடில்லி : ‘உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் டில்லி வன்முறை தொடர்பாக, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடக் கூடாது’ என, ‘டிவி சேனல்’களுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் டில்லியின் ஜஹாங்கீர்புரியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, ‘டிவி’க்களில் வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், டிவி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன் விபரம்:உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் டில்லி கலவரம் தொடர்பாக, டிவிக்களில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியிடப்படுகின்றன; ஆத்திரமூட்டும் வகையில் தலைப்புகள் வைக்கப்படுகின்றன.
‘சிசிடிவி கேமரா’ காட்சிகள், அவற்றின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியிடப்படுகின்றன.இதேபோல், பல நேரங்களில் சர்வதேச அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் கூறியதாக, தவறாக மேற்கோள் காட்டப்படுகின்றன. பார்வையாளர்களை துாண்டும் நோக்கத்தில், செய்தி வாசிப்பாளர்கள் புனையப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றனர். சில டிவி சேனல்களில் நடக்கும் விவாதங்களில், தரைக்குறைவான வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன.
எனவே, சட்டத்திற்கு உட்பட்டு டிவி சேனல்கள் செயல்பட வேண்டும். கண்ணியம் குறைவாக இருக்கும் எந்த நிகழ்ச்சிகளையும், டிவிக்கள் ஒளிபரப்பக் கூடாது. நட்பு நாடுகளை விமர்சனம் செய்யக் கூடாது. எந்தவொரு மதத்தையோ, சமூகத்தையோ தாக்கி பேசும் நிகழ்வுகளை ஒளிபரப்பக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement