வெடிபொருட்கள் அழிப்பு
சண்டிகர்: யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள புரைல் சிறை சுற்றுச்சுவர் அருகே நேற்று முன்தினம் ஒரு சாக்குப்பை கிடந்தது. போலீசார் ஆய்வில் சாக்கில் இருந்த பெட்டிக்குள் ‘டெட்டனேட்டர்கள்’ உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய தேசிய பாதுகாப்பு படையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் வெடிபொருட்களை பாதுகாப்பான பகுதியில் நேற்று அழித்தனர்.
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் பஹூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு விரைந்தனர். அப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் லஷ்கர் – இ – தொய்பாவுடன் தொடர்புடைய ஒருவர் உள்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் கூறினர். அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது.
போலீஸ் மோப்பநாய் திருட்டு
நிவாரி: மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டம் ஓர்ச்சா நகர கோவில் அருகே ஜெர்மன் ஷெப்பர்டு வகை போலீஸ் மோப்ப நாயுடன் ஆயுதப்படை போலீஸ்காரர் ஜமுனா பிரசாத் சமீபத்தில் நின்றிருந்தார். அருகே திருமண விழாவில் வெடிகள் வெடித்ததால் அச்சமடைந்த மோப்பநாய் அங்கிருந்து ஓடியது. அதனை காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் பிடித்து சென்றதாக போலீஸ் ஸ்டேஷனில் ஜமுனா பிரசாத் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே மோப்ப நாய் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 ஏக்கரில் மாணவர் விடுதி
நாசிக்: மஹாராஷ்டிராவின் நாசிக்கில் தொழில்நுட்ப கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட பெண்கள் விடுதியை தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவார் நேற்று துவக்கி வைத்தார். அவர் கூறும்போது, ”மும்பை புறநகரான பாந்த்ராவில், தொழில்நுட்ப கல்வித்துறைக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், மிகப்பெரிய மாணவர் விடுதி கட்டப்பட உள்ளது. இதில் மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் சேர்த்துக்கொள்ளப்படுவர்,” என்றார்.
தொழிற்சாலையில் தீ விபத்து
கோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் மத்திய பகுதியில் உள்ள டாங்க்ரா கிறிஸ்டோபர் சாலையில் இருக்கும் தொழிற்சாலையில் நேற்று தீப்பற்றியது. விரைவில் எரியும் பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு இருந்ததால் தீ வேகமாக பரவியது. குறுகிய பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையை சிரமத்துடன் அடைந்த தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என, போலீசார் கூறி உள்ளனர்.
Advertisement